புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, கௌரவ மேல்மாகாண ஆளுநர் எ.ஜே.எம். முஸம்மில் அவர்கள் புனித மக்காவிலிருந்து விடுத்த வாழ்த்துச் செய்தி

தியாகத்தை எடுத்தியம்பும் ஹஜ் கிரியை சகல இன மக்களுடனும் இணக்கமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது என மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அவர் மக்காவிலிருந்து வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை முஸ்லிம்களுக்கு கடந்த சில மாதங்கள் மிகவும் நெருக்கடிமிக்கதாக இருந்தது. குறிப்பாக ரமழான் நோன்பு காலத்திலும் அச்சமான நிலையே நீடித்தது. எனினும் இன்று ஹஜ்ஜுடைய காலத்தில் ஓரளவு நிலைமை சுமூகமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

இஸ்லாம் பற்றிய பல விதமான சந்தேகங்கள் கடந்த காலங்களில் நாட்டில் தோற்றுவிக்கப்பட்டன. அல்குர்ஆன், ஹதீஸ் ஊடாக இஸ்லாம் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் வலியுறுத்துகின்றது என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

இதேபோல் நாம் வெறுப்புப் பேச்சில் இருந்து தவிர்ந்து இஸ்லாம் சகவாழ்வை வலியுறுத்துகின்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஹஸரத் இப்ராஹிம் (அலை) அவர்களும் அவரது குடும்பத்தரும் செய்த தியாகத்தை இந்த ஹஜ் கிரியை நமக்கு கற்பிக்கிறது. அதே தியாக உணர்வுடன் நாமும் இந்த நாட்டில் அமைதி, சமாதானம், ஒற்றுமை, சகவாழ்வை உறுதிப்படுத்தி நல்லிணக்கத்துடன் வாழ முயற்சிக்க வேண்டும்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாட்டில் இடம்பெற்ற சமாதானம், நல்லிணக்கம், சகவாழ்வை வலியுறுத்தும் தேசிய மாநாட்டிலும் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் கலாநிதி முஹம்மத் பின் அப்துல் கரீம் இஸ்ஸாவும் குறிப்பிட்டிருந்தார். குறித்த மாநாடு நாட்டுக்கு நல்லதொரு செய்தியை வழங்கியிருக்கும்.

இவ்வாறான நிலையில் உலக வாழ் முஸ்லிம்களுக்கு தியாகத் திருநாள் வாழ்த்துகள் என்றார்