கொழும்பு சுசமயவர்தன மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஆற்றிய உரை

பட்டப்படிப்புக்கான பாடநெறிகளை தெரிவு செய்யும் போது, சந்தையில் எந்த துறையில் அதிக  கேள்வி காணப்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அந்தத் துறையில் தேர்ச்சி பெற்றால் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வது அவ்வளவு கடினமான விடயமல்ல, என மேல் மாகாண ஆளுநர்  ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுசமயவர்தன மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர்  ஏ.ஜே.எம். முஸம்மில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த பரிசளிப்பு விழா நேற்று (19) புதிய நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது ஆண்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், சிறப்பாகச் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கும் ஆளுநர் அவர்களினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.

அங்குத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்:பட்டதாரிகள் தங்கள் நியமனங்களைப் பெற்றுக்கொள்ள அரசியல் உதவிகள் தேவை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். அந்த நிலைப்பாட்டை நாம் இம்முறை மாற்றியமைத்துள்ளோம். இம்முறை நியமனங்கள் வழங்கும் போது, எந்தவொரு வேண்டுகோள்களுக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணிந்து நாம் நியமனங்களை வழங்கவில்லை. வெளிப்படைத்தன்மையாகப் பரீட்சை வைத்து, முடிவுகளை இணையத்தளங்களில் வெளியிட்டு, தகுதியானவர்களைத் தெரிவு செய்தோம். அந்த நம்பிக்கையை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.

அதேவேளை மாணவர்களும், தாம் மத்திய அரசுக்கு உரித்தான பாடசாலைகளில் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். அங்குதான் எல்லா வசதிகளும் காணப்படுகிறது என்று எண்ணுகின்றனர். இந்த எண்ணத்தையும் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். எமது மாகாணத்திற்கு உரித்தான பாடசாலைகள் 1200 காணப்படுகின்றனர். மத்திய  அரசுக்கு உரித்தாக 362 பாடசாலைகளே உள்ளன. ஆகவே எங்களுக்குத் தான் அதிக மாணவர்களும், அதிக ஆசிரியர்களும் காணப்படுகின்றனர் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.