மேல் மாகாண ஆளுநர் கம்பஹா மாவட்ட வைத்தியசாலை விஜயம்

கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக தீர்த்து வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கிய மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், பொதுமக்கள் அசௌகரியங்கள் இன்றி வைத்திய சேவையை பெற்றுக் கொள்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அறிவுரை வழங்கினார்.

கம்பஹா வைத்தியசாலைக்கு சனிக்கிழமை விஜயமொன்றை மேற்கொண்ட ஆளுநர், வைத்தியசாலையின் நிலவும் குறைபாடுகளை நேரடியாக கண்டறிந்து கொண்டதுடன், நீண்டகாலமாக பாவனையில் உள்ள பழைய குளிரூட்டி இயந்திரங்களையும், மின் உயர்த்திகளையும் மாற்றுமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அவ்வாறே, வைத்தியசாலையில் ஆங்காங்கே நீர்க் கசிவுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஆளுநர் இதன் மூலமாக ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் குறித்தும் தீ பாதுகாப்பு ஆபத்துக்கள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கூறினார்.

வைத்தியசாலை குறைபாடுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்த ஆளுநர், வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களின் சேவையை எவ்வித இடையூறும் இன்றி பெற்றுக் கொள்வதற்கான சூழல் இருக்க வேண்டும். வைத்தியசாலையில் குறைபாடுகள் இருக்குமாக இருந்தால் பொதுமக்கள் முழுமையான சேவையை பெற்றுக் கொள்வதில் தடைகள் ஏற்படும். இது வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளையே பாதிக்கும். வைத்தியசாலையில் குறைபாடுகள் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. வைத்தியசாலையின் உடனடி தேவைகளான மின் உயர்த்தி, குளிரூட்டி ஆகியவை பழுதடைந்துள்ளன. இவை நீண்டகாலமாக பொருத்தப்பட்டு பாவனை இழந்து காணப்படுகின்றன. தற்போது இவை செயலற்று, பழுதடைந்துள்ளது. கூரையில் இருந்து நீர் கசிவு ஏற்படுவதால் மின் ஒழுக்கு பிரச்சினை தொடர்ச்சியாக உருவாகின்றது.

இவற்றை நேரடியாக அவதானித்த ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் மின்உயர்த்தி, குளிரூட்டி ஆகியவற்றை பெற்றுக் கொள்வதற்கான விலைமனுக்களை கோரும்படி வைத்தியசாலை பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியதுடன், பிரதான கட்டிடத்தின் கூரையை திருத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசனை வழங்கினார்.

அவ்வாறே, மொறட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப அதிகாரிகளின் அறிக்கையை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்தார். இதற்கு மேலதிகமாக சுகாதார பணிப்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி எவ்வித தாமதமும் இன்றி மேற்படி குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் உறுதி அளித்தார்.

இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆளுநர், இனம், மதம், குல வேறுபாடுகள் இன்றி மாகாண ஆளுநர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார். மக்களுக்கு சேவை செய்யக்கூடிய நபர்களை தெரிவு செய்தே ஆளுநர்களை நியமித்துள்ளதாகவும், மக்களுக்கு அர்ப்பணிப்புடன் வேலை செய்பவர்களையே ஜனாதிபதி நியமித்துள்ளதாகவும் ஆளுநர் முஸம்மில் சுட்டிக்காட்டினார்.

கம்பஹாவுக்கு செல்வதற்கு முன்னர் கொட்டஹேன சென். லூசியா கல்லூரிக்கு விஜயம் செய்த ஆளுநர், அங்கு பாழடைந்த நிலையில் காணப்பட்ட பாடசாலையின் கட்டிடமொன்றை உடனடியாக திருத்தி மாணவர்கள் கல்வி பயில்வதற்கான சிறந்த இடமாக மாற்றியமைக்குமாறும், இந்தக் கட்டிடம் மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிப்பதுடன், கல்வி பயில்வதற்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்பதால் திருத்த வேலைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

ஆளுநரின் இந்த விஜயத்தில், மேல்மாகாண தவிசாளர் சுனில் விஜேரத்ன, கம்பஹா பிரதேச சபை முன்னாள் தலைவரும் மாகாணசபை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான அஜித் பஸ்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண ஆகியோரும் கலந்து கொண்டனர்.