தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற சமாதானம், அமைதி மற்றும் சகவாழ்வு நல்லிணக்க மாநாட்டில், உலக முஸ்லிம் லீக் அமைப்பு ஈஸ்டர் தினதாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக, இலங்கை அரசாங்கத்திற்கு ரூபா 900 மில்லியன் வழங்கியது

கௌரவ மேல்மாகாண ஆளுநர் எ.ஜே.எம் முஸம்மில் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதானம், அமைதி மற்றும் சகவாழ்வு நல்லிணக்க மாநாடு 1500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடனும், 10 இற்கும் மேற்பட்ட நாட்டைச்சேர்ந்த பிரதிநிதிகளுடனும் 30.07.2019 அன்று தாமரை தடாக அரங்கில் வெற்றிகரமாக நடந்தது.

இந்த மாநாட்டிற்கு தலைமை விருந்தினராக இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களும், சிறப்பு விருந்தினராக உலக முஸ்லீம் லீக் செயலாளர் நாயகம் மாண்புமிகு கலாநிதி முஹம்மத் அப்துல் கரீம் அல் ஈஸா அவர்களும் கலந்து கொண்டனர்.

மேற்குறிப்பிட்ட மாநாட்டின் போது வெளிநாட்டு துதூவர்களும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், அரசு சாரா நிறுவன பிரதிநிதிகளும், அரச திணைக்களங்களும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்கஷ அவர்களும், பாரளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களும், மேலும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க அவர்களும் சமூகமளித்தனர்.

கலாநிதி அல் ஈஸா அவர்களின் இலங்கை விஜயத்தின் போது நான்கு நிக்காய்களினதும் பீடாதிபதிகளையும், பேராயர் கர்தினால் மல்கம் ரஜ்சித் அவர்களையும், இந்து மற்றும் முஸ்லிம் மத தலைவர்களையும் சந்தித்தார். அத்துடன் கடந்த 2019ம் ஆண்டு சித்திரை மாதம் ஈஸ்டர் தினதாக்குதலுக்குள்ளான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கும் சென்றார்.

இம் மாநாட்டில், கலாநிதி அல் ஈஸா அவர்கள் ஈஸ்டர் தினதாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு ரூபா 900 மில்லியன் வழங்கினார்.